தமிழ் நடிகைகளை இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ்: நடிகை ரோகிணி போலீசில் புகார்!

தமிழ் நடிகைகள் ‛அட்ஜெட்மென்ட்’ செய்கிறார்கள் என இழிவாக பேசிய டாக்டர் காந்தாராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு, பிரபல நடிகைகள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ஹோமா கமிட்டி விசாரித்து 2019ல் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரளாவில் போலீஸ் ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் நிவின் பாலி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகை ஆட்டிப்படைக்கும் இந்த ஹோமா கமிட்டி விவகாரம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நடிகர், நடிகைகள் தாங்கள் சந்தித்த மற்றும் கேள்விப்பட்ட விவகாரங்களை மீடியாக்களில் பேசியும், வலைதளங்களில் பதிவிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுதவிர பல யூடியூப் சேனல்களில் நடிகைகள் அட்ஜெட்மெண்ட் செய்ததாக பலரும் பேட்டியளித்து வருகின்றன.

அந்த வரிசையில் கடந்த 7 ம் தேதி டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகைகளை இழிவுப்படுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசியிருந்தார். இதுதொடர்பாக நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ரோகிணி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நிலையில் இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.
அந்த புகாரில், ‛‛செப்டம்பர் 7ம் தேதி யூடியூப் சேனலில் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி அவதூறாகவும், மோசமாகவும் டாக்டர் காந்தாராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.