தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் லப்பர் பந்து படத்துக்கு இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால், இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.
கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் மையப்புள்ளியில் இருந்து விலகி, தான் சொல்ல விரும்புவதை தெரிவிக்க முனைகின்றன. அதனால்தான் ‘லப்பர் பந்து’ எனக்கு விசேஷமான படமாக தெரிகிறது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர். இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.