வேட்டையன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வேட்டையன் படம் நாளை அதாவது 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் ரஜினியின் தீவிர ரசிகர்களின் ரிங்டோனாகவே மாறிவிட்டது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அனிருத் தான் இசை அமைக்கும் ஒரு படத்திற்கு முழுவதுமாக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை முடித்த பின்னர், படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேட்டையன் படம் குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.

ஏற்கனவே கடந்த 6ஆம் தேதியில் இருந்து படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதால் ரசிகர்கள் வேகமாக டிக்கெட் புக் செய்தனர். இதனால் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தது. இன்னும் சொல்லப்போனால், படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் 6ஆம் தேதியே புக் ஆகிவிட்டது. அதேநேரத்தில் இந்த புக்கிங் அனைத்தும் 10ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேலான காட்சிகளுக்குத்தான் இருந்தது. இதனால் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு காலை 9 மணி காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வீதம் இரவு 2 மணிக்குள் படத்தினை திரையிட்டு முடித்து ரசிகர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்திற்கு வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் வசூல் வேட்டை புரியும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.