வந்தே பாரத் ரயிலில் நிறைய கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் உணவு தரமாக இல்லை என பரபரப்பு புகாரை கிளப்பி இருக்கிறார் நடிகர் பார்த்திபன். மேலும் கம்ப்ளைன்ட் புத்தகத்தில் புகார் கொடுத்த புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில், பலரும் அது உண்மைதான் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. எக்ஸ்பிரஸ், சதாப்தி ரயில்களை விட வேகம் என்பதோடு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படும். அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது கூட மிகவும் வசதியாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் பயணிப்பாதாக கூறுகின்றனர் பயணிகள்.
ஏற்கனவே இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுகிறது. அதே நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. மேலும், மற்ற ரயில்களில் வழங்கப்படுவது போன்ற உணவே வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முதலாவதாக தண்ணீர், ஆங்கில – தமிழ் செய்தித்தாள்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து டீ, காபி, ஜூஸ் ஸ்னாக்ஸ் வகைகளும் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சைவ அசைவ உணவுகளும் பயணிகளுக்கு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 250 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உணவுக்காக தனியே வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உணவு தரம் இல்லை எனவும் புகார் முன்வைக்கப்படுகிறது. சில நேரங்களில் நான் வெஜ் பயணிகளுக்கு வெஜ் உணவும், வெஜ் பயணிகளுக்கு நான் வெஜ் உணவும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ரொட்டி, இட்லி, பொங்கல், சிக்கன் உள்ளிட்டவை தரமற்று வழங்கப்படுவதாக நீண்ட காலமாகவே பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று சென்னை சென்ட்ரல் கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென” கம்ளைண்ட் புக்கில் எழுதிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அந்த புகாரில், “உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால் இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கி கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி” என எழுதியுள்ளார். இதனையடுத்து பார்த்திபனின் புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.