லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது நினைவுக் கூரத்தக்கது. இந்நிலையில் ‘ரோலக்ஸ்’ படம் எப்போது நடக்கும் என்பதற்கு சூர்யா பதிலளித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மும்பையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் குறித்து, தனிபடமாக எப்போது என்று சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் அரை நாள் மட்டுமே நடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என நினைக்கவில்லை. ’விக்ரம்’ வெளியான பிறகு நானும், லோகேஷ் கனகராஜும் சந்தித்தோம். அப்போது ’ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை ஏன் தனி படமாக பண்ணக் கூடாது எனக் கேட்டார். அதற்குப் பிறகு இரண்டு முறை சந்தித்துப் பேசினோம். அவரும் பிஸி, நானும் பிஸி. இருவரும் இணையும் போது ‘ரோலக்ஸ்’ அல்லது ‘இரும்புக்கை மாயாவி’ ஏதேனும் ஒன்று நடக்கும். அதற்கு காலம் தான் பதில் சொல்லும்” என்று பதிலளித்துள்ளார் சூர்யா.
நேர்காணலில் மேலும் சூர்யா பேசியதாவது:-
கங்குவா திரைப்படத்திற்காகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். ஒரு குழந்தையைப்போல் இரண்டு ஆண்டுகளாக உருவான படமிது. மற்ற மொழிகளிலிருந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி போன்ற பிரம்மாண்ட படங்கள் வந்துவிட்டன. தமிழில் கங்குவா திரைப்படமே அதற்கான அடியை எடுத்து வைத்திருக்கிறது.
கீழடியில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் சுவடுகள் கிடைத்திருக்கின்றன. பல நாடுகளுக்கு 500 ஆண்டுகால வரலாறுகூட இல்லை. ஆனால், தமிழ் மொழியின் தொல்லியல் சான்றுகளுக்கும் இலக்கியத்துக்கும் 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றைக் கொண்டு கங்குவாவின் கதையை என்னால் உணர முடிந்தது.
நேருக்கு நேர் வெளியானபோது திரையரங்கில் விசிலடித்து உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும் எனக்கும் எந்தத் தொப்புள் கொடி உறவும் இல்லை. அவர்களின் அன்பிற்காக எதையாவதை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. எனக்கும் 49 வயதாகிவிட்டது; புதிய தலைமுறை பார்வையாளர்கள் வந்துவிட்டனர். ஆனாலும், அவர்களின் அன்பும் ஆதரவும் இப்போதும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு, உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் 49-வது வயதில் கங்குவா படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன். இந்திய சினிமாவில் கங்குவா நீண்ட நாள் பேசப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.