நண்பரின் புதிய பாதை நல் வரவாக அமையட்டும்: சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா, விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் ‘நண்பரின் புதிய பாதை நல் வரவாக அமையட்டும்’ என தெரிவித்தார்.

‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது:-

அன்பான ரசிகர்கள், அன்பு தம்பிகள், தங்கைகளுக்கு வணக்கம். நான் இருப்பதே உங்களால் தான். எனது நம்பிக்கை நீங்கள் தான். பல ஊர்களில் இருந்து வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என்னுடைய 27 ஆண்டுகால திரை வாழ்க்கையில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், அம்மா – அப்பா, திரைத்துறையை சேர்ந்தார்கள், நண்பர்கள் என அனைவருக்கும் மிக்க நன்றி.

‘சூப்பர் ஸ்டார்’ (ரஜினிகாந்த்) அவர்களுக்கு ரொம்ப நன்றி. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி. உங்களது உடலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க எங்களது பிரார்த்தனைகள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த படத்தை நிறைவு செய்ய எதிர்கொண்ட சவால்கள் குறித்து நான் அறிவேன்.

கங்குவா படத்தில் என்னுடன் நடித்த நடிகர் பாபி தியோல் என்னுடைய மற்றொரு சகோதரர் என்ற உணர்வு அவரை முதல் முறை சந்தித்ததும் எனக்கு கிடைத்தது. இதில் பணியாற்றியுள்ள அத்தனை கலைஞர்களும் அற்புதமான உழைப்பை கொடுத்துள்ளனர். திஷா, நடராஜ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரவிக்குமார் சார், கோவை சரளா மேடம் என அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பில் தினந்தோறும் பல சவால்கள்.

மூவாயிரம் பேர் வரை இந்த படத்தில் இயக்குநர் சிவா கையாண்டுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. மதன் கார்க்கி வசனம் சார்ந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மன்னிப்பு’ பாடல் என்னுடைய பேவரைட். அதனை விவேகா எழுதி உள்ளார். மறைந்த கலை இயக்குநர் மிலன் சிறப்பாக இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளார்.

நான் சிவாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் சிறந்த மனிதனாகி உள்ளேன். ‘நல்லதே நடக்கும்’, ‘என் மனசை யாரும் சங்கடப்பட வைக்க முடியாது. அதற்கான சக்தி அவருக்கு கொடுக்க மாட்டேன்’ என சிவா சொல்வார். மன்னிக்க மாதிரி சிறந்த விஷயம் எதுவும் இல்லன்னு எனக்கு புரிய வைத்தது சிவாதான். அதனால என்ன வெறுப்பை விதைத்தாலும் அன்பை மட்டுமே பரிமாறுவோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு உங்க நேரத்தை செலவு செய்ய வேண்டாம்.

என்னுடைய திரை வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தையும், இறக்கத்தையும் எதிர்கொண்டுள்ளேன். அதில் எனக்கு சந்தோஷம் தான். அதனால் புதிய முயற்சி மேற்கொண்டு நான் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறேன். என் படம் என்ன ஆனாலும் ரசிகர்களிடம் கிடைக்கும் அன்புக்கு எல்லையே இல்லை.

லயோலா கல்லூரியில் நான் படித்த போது நிறைய விஷயம் யோசித்துள்ளேன். அங்கு படிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நான் நினைத்தது உண்டு. கல்லூரியில் எனக்கு ஜூனியர். என்னை வைத்து இரண்டு படங்கள் தயாரித்துள்ளார். அவர்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவரை எப்போதும், யார் வேண்டுமானாலும் அணுகலாம். அவருக்கு எனது வாழ்த்துகள்.

கல்லூரியில் என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். அந்த நண்பர் புதிய பாதையை போட்டு, புதிய பயணத்துக்காக… அவரோடு வரவும் நல்லவராக இருக்கட்டும். இவ்வாறு சூர்யா கூறினார்.