அஜித் குமார் ரேசிங் என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்ட நிலையில், அது, அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையே, அஜித்குமார் தனக்கு விருப்பமான கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அஜித்குமார் 24H துபாய் 2025 போட்டியில், பந்தய அணியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை கிளாசில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் அஜித். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், அஜித்குமார் தலைமையிலான அணிக்கு Ajithkumar Racing எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
அஜித் குமார் ரேசிங் கார் பந்தைய அணிக்கு ajithkumarracing.com என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியானது. ajithkumarracing.com என்ற இணையதளம் இன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்த இணையதளத்தில் அஜித்தின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, இது அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல என தெரிவித்துள்ளார். ajithkumarracing.com என்ற இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும், தயவுசெய்து இந்த தளத்தை புறக்கணியுங்கள்” என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.