பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான கயாடு லோஹர்!

பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி வரும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனை தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகையான கயாடு லோஹர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இயக்குநராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் உருவாகி வரும் நிலையில், அதற்கு நடுவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வரும் பிரதீப் ஆண்டனிக்கு ஏற்கனவே அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் இன்னொரு மலையாள நடிகையும் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் அதே போல தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கி வரும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனை தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகையான கயாடு லோஹர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில் பேட்டை படத்தில் அறிமுகமான கயாடு லோஹர் 2022ம் ஆண்டு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2023-ம் ஆண்டு மராத்தியில் வெளியான ஐ பிரேம் யூ படத்தின் மூலம் அங்கேயும் அறிமுகமான கயாடு லோஹர் இந்த ஆண்டு மீண்டும் மலையாளத்தில் வெளியான ஒரு ஜாதி ஜாதகம் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.