நயன்தாராவின் திருமணம் மற்றும் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ‘நானும் ரௌடி தான்’ படத்திலிருந்து காதலிக்கத் தொடங்கினர். இருவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்தத் திருமணத்தின் வீடியோ வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதற்கு ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆவணப்பட பாணியிலான இந்த வீடியோ வரும் நவம்பர் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா திரைக்குப் பின்னால் உள்ள அவரது பக்கங்கள் குறித்து பெரிதாக பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது இந்த ஆவணப்படம் அவரது வாழ்க்கை பயணத்தையும், திரைப் பயணத்தையும், அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள், போராட்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்த ஆவணப்படம் பேசுகிறது.
‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற முழக்கங்களுடன் நயன்தாரா நடித்த படத்தின் மாஸான காட்சிகளுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். கன்னட நடிகர் உபேந்திரா, இயக்குநர் அட்லீ, நடிகை டாப்ஸி, நடிகர் ராணா, ராதிகா, இயக்குநர் நெல்சன் ஆகியோர் அடுத்தடுத்து நயன்தாரா குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நாக சைதன்யா, நயன்தாராவின் ரிலேஷன்ஷிப் குறித்து பேசுகையில், அதுவரை இருந்த ட்ரெய்லரின் உற்சாகம் மாறி, தன்னை பற்றி விமர்சனங்கள், நம்பிய மனிதர்கள் குறித்து நயன்தாரா பகிர்கிறார்.
தொடர்ந்து “எது நடந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்; முன்னேறிச் செல்வேன்” என உற்சாகமாக பேசுகிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அறிமுகம், காதல், திருமணம் என கடக்கிறது ட்ரெய்லர். “நானும் ரௌடி தான்’ படத்தின்போது படக்குழுவில் யாருக்கும் நாங்கள் காதலிக்கிறோம் என்பதே தெரியாது” என்கிறார் விக்னேஷ் சிவன். அடுத்தடுத்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதல் பயணத்தை விவரிக்கின்றனர். இறுதியில் திருமண காட்சிகளுடன் ட்ரெய்லர் நிறைவு பெறுகிறது. மொத்தமாக நயன்தாராவின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் இந்த ஆவணப்படம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது ரசிகர்களுக்கு திருமண ட்ரீட்டாக இருக்கும் என தெரிகிறது.