நான் எப்போதும் கிளிசரின் போடாமல் தான் சோகமான காட்சிகளில் நடிப்பேன். வெளியில் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் இருக்கும் என்று கூறியுள்ளார் அபிராமி வெங்கடாசலம்.
நடிகை அபிராமி வெங்கடாசலம் மாடலாக மட்டுமல்லாமல் டிவி சீரியல்கள், சினிமா என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று தன்னுடைய மாஸை வெளிப்படுத்திய நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் இவரது வீட்டு கதவு தொடர்ந்து தட்டப்பட்டு வந்தன. நோட்டா, களவு என அடுத்தடுத்த படங்களில் நடித்த இவருக்கு, அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ராக்கெட்ரி, வான் என படங்களில் அபிராமி வெங்கடாசலம் நடித்திருந்தார். இவரது நடிப்பில் விக்ரமின் துருவ நட்சத்திரம், நெருஞ்சி உள்ளிட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ள நிலையில், தற்போது யூ-டர்ன் அடித்து மீண்டும் சீரியலில் கமிட் ஆகியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் ரீப்ளேஸ்மென்ட் ரோலில் தற்போது அபிராமி வெங்கடாசலம் இணைந்துள்ளார்.இந்த சீரியலில் சுடர் என்ற கேரக்டரில் நடித்துவந்த ஜாஸ்மின் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அபிராமி இணைந்துள்ளார்.
இந்த சீரியல் குறித்து பேசிய அபிராமி, சீரியலில் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துவருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு தாய்மை உணர்வு இருக்கும் என்றும், அதனால் இந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் எளிதாக உள்ளதாகவும் அபிராமி கூறியுள்ளார். இந்த தொடரில் ரீபிளேஸ் கேரக்டரில் நடிப்பது சவாலாக உள்ளதாகவும், ஏற்கனவே ஒரு முகத்தை பார்த்து பழகிய ரசிகர்களை மற்ற முகத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது சிரமமானது என்றும் அதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் அபிராமி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் எப்போதும் கிளிசரின் போடாமல் தான் சோகமான காட்சிகளில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். வெளியில் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் இருக்கும் என்று கூறியுள்ள அபிராமி, தன்னுடைய போராட்டங்களை நினைத்துக் கொண்டாலே கிளிசரின் இல்லாமல் தானாக கண்ணீர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் சுடர் கேரக்டர் கொஞ்சம் வாலுத்தனமான கேரக்டராக இருக்கும் நிலையிலும் நிஜ வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை இதில் செய்ய முடியாது என்றும் அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.