எனது தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது: ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் எனது தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். இதனையடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகியிருக்கிறார். இப்போது அவர் கூலி படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கமல் ஹாசனும், சரிகாவும் எனது பெற்றோராக இருப்பது பெருமைதான். இருந்தாலும் எனது தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது. வளர்ந்துவரும் காலத்தில் எனது தந்தை பற்றிய கேள்விகளை நான் அதிகம் எதிர்கொண்டேன். பலரும் என்னை கமலின் மகள் என்று குறிப்பிட்டார்கள். அது வித்தியாசமான அடையாளத்தை கொடுத்தது. ஆனால் நான் ஸ்ருதிஹாசன். எனக்கு எனது சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைப்பேன். யாராவது கேட்டால் இல்லை எனது அப்பா டாக்டர் ராமச்சந்திரன். நான் பூஜா ராமச்சந்திரன் என்று சொல்வேன். ராமச்சந்திரன் என்பவர் எங்களது பல் மருத்துவர். எனது தந்தையும், தாயும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அவர்களால் வளர்க்கப்பட்டது என்னையும், என் தங்கையையும் கடுமையாக பாதித்தது. பெற்றோர்கள் பிரிந்த பிறகு நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன். சென்னைக்கு வெளியே வாழ்க்கையை அனுபவிக்க அது எனக்கு வாய்ப்பாக அமைந்தது. சாத்தியமற்றது: என் தந்தையின் புகழ் வெளிச்சத்திலிருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. அதன் காரணமாக சென்னையே எனக்கு பிடிக்கவில்லை. இங்கிருப்பவர்களை வெறுப்பாக உணர்ந்தேன். இருந்தாலும் தந்தையால் எனக்கு கிடைக்கும் பெருமையை நான் ஒத்துக்கொள்கிறேன்” என்றார்.