விவாகரத்து கேட்ட ஜெயம் ரவி: சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு!

மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி, சிறுவயதிலிருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். கடந்த 1989ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின் நாட்களில் தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டார். குறிப்பாக 2003ல் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அவர் பெயர் நன்கு பரிட்சயமானது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட் அடிக்கவே, அவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவானார். இடையே கடந்த 2009ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான சுஜாதா விஜயக்குமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருந்து வந்தது. இதனையடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சோஷியல் மீடியாவில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கியிருந்தது, இருவருக்கும் இடையே உரசல் இருந்ததை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியது. இந்த உரசலின் உச்சமாக, மனைவி ஆர்த்தியிடமிருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். அதேபோல, அவரது மனைவி ஆர்த்தி காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். விசாரணையில் இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.