நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். படம் மெகா ஹிட்டான சூழலில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சில வருடங்கள் இருந்த அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
சூழல் இப்படி இருக்க நயன்தாராவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்தும், அவரது திருமணத்தையும் இணைத்து Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப் படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் கடந்த 18ஆம் தேதி ஸ்ட்ரீமானது. இதற்கிடையே அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜுகளை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தனுஷ் மறுத்துவிட்டார். இருந்தாலும் படத்தின் ட்ரெய்லரில் மூன்று நொடி ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனையடுத்து கொதித்தெழுந்த நயன்தாரா தனுஷுக்கு எதிராக மூன்று பக்க அளவில் காட்டமான கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சூழல் இப்படி இருக்க இந்தப் பஞ்சாயத்து ஓயும் என்று பார்த்தால் அந்த ஆவணப் படத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மூன்று நொடிகள்கூட நானும் ரௌடிதான் ஃபுட்டேஜை பயன்படுத்த தனுஷ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் டாக்குமெண்ட்டரியில் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பலரும் நயன்தாராவுக்கு எதிரான ஸ்டாண்டை எடுத்தார்கள்.
இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது, நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த மனுவை வழக்காக தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.