வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர். டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராஃப் வெட்டிக் கொண்டும், ஈர்க்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக இளையராஜாவின் இசை இதம்.
கம்யூனிஸ்ட்டாக கிஷோர், அனுராக் காஷ்யப்பின் சர்ப்ரைஸ் என்ட்ரி, கென் கருணாஸ் தோற்றம் ட்ரெய்லரின் ஹைலைட்ஸ். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், திராவிட அரசியலின் தெளிப்பு, கம்யூனிஸ்ட் கொடிகளின் அணிவகுப்பு என அழுத்தமான அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளதை காட்சிகள் உணர்த்துகின்றன. முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்கான படமாக தெரிந்தாலும், ட்ரெய்லரின் இறுதியில் சூரி என்ட்ரி கொடுக்கிறார். “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” போன்ற வசனங்கள் நச் ரகம்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ.26) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூரி பேசியதாவது:-
இந்த விழாவில் மட்டுமல்ல கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஏறாத இடம் இல்லை, பார்க்காத வேலை இல்லை. அந்த வேலைகளை பார்த்துவிட்டு வந்து கை, கால் வலியுடன் படுத்தால் எதிர்வீட்டு ஜன்னலில் லேசாக இளையராஜா பாடல் கேட்கும். அந்த வீட்டு கதவை தட்டி கொஞ்சம் கதவை திறந்து விடுங்கள் என்று சொன்னால், அவருடைய பாடல் தென்றல் போல வந்து நம்மை தட்டி எழுப்பும். ஒரு தாயைப் போல இருந்து அவருடைய பாடல் நம்மை ஆறுதல்படுத்தும்.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு ‘ஆப்ஷன்’ இருக்கும். ஆனால் ‘ஆப்ஷன்’ எதுவும் இல்லாத ஒரே ‘ஆப்ஷன்’ இளையராஜா மட்டும்தான். அவருக்கு மாற்று என்பதே கிடையாது. அவருடைய அலுவலகத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அவர் வாயால் சொல்லி கேட்டது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் மட்டுமில்லாமல் என் சந்ததிகள் கூட போற்றி பாதுகாக்க வேண்டிய பெருமை அது” இவ்வாறு சூரி தெரிவித்தார்.