எனது செல்வாக்கை நேர்மறையாக பயன்படுத்த விரும்புகிறேன். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.
கோத்ரா ரயில் நிலையம் சம்பவத்தில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். இந்த சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ராஷி கண்ணா பயமறியாத பத்திரிகையாளர் அமிர்தா கில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவ.30இல் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அதனை முன்னிட்டு 100 குழந்தைகளுடன் செடி நடும் நிகழ்ச்சியை கொண்டாடினார். இந்தப் படம் குறித்து பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இது குறித்து அளித்த பேட்டியில் ராஷி கண்ணா பேசியதாவது:-
இவ்வளவு ஆதரவு கிடைக்குமென நான் நினைக்கவில்லை. செல்வாக்கு மிகுந்த மனிதர்களான முதலமைச்சர், பிரதமரிடமிருந்து எக்ஸ் பதிவுகள் வருவது மிகப்பெரிய தன்னம்பிக்கையை தருகிறது. இது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவ.29, திரைப்பட நாளை முன்னிட்டு டிக்கெட் விலை ரூ.99க்கு விற்கிறார்கள். இந்தப்படம் நிச்சயமாக நமது படங்களுக்கு உதவும். படம் பார்க்காதவர்கள் இந்த சமயத்தில் படத்தைப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு. இது பார்வையாளர்களுக்கு ஒரு போனஸ் போன்றது. இதை மக்கள் உபயோகப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.
படம் பார்க்காமல் முடிவெடுக்காதீர்கள். இந்தப்படம் பலரும் நினைப்பதுபோல் பிரசாரம் கிடையாது. விமர்சனங்கள் மிகவும் நேர்மறையாகவே வருகின்றன. அதனால், மக்கள் திறந்த மனதுடன் படத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தமுறை நான் பிறந்தநாளுக்கு முன்பே கொண்டாடுகிறேன். எனது திட்டம் குடும்பத்துடன் வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோயிலை பார்வையிட வேண்டும். அதற்கு முன்பாக, ஒவ்வொரு வருடமும் மரக்கன்று நடுவேன். இந்தமுறை அதை பெரியதாக செய்யவிருக்கிறேன். பாம்லா தொண்டு நிறுவனத்தில் இருந்து குழந்தைகளுடன் மரக்கன்றுகள் நடலாம். அதுதான் அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுசூழல் குறித்த முக்கியத்துவத்தை கற்றுத்தருவதாக இருக்கும் என்றார்கள்.
கடந்த 4 வருடங்களில், நான் எனது பிறந்தநாளுக்கு மரக்கன்று நடுவேன். ஆனால், சத்சங்கம் நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் வீட்டில் நடத்துவேன். எனக்கு ஆழமான இறைநம்பிக்கை இருக்கிறது. கடவுளை கொண்டாடுவது எனக்கு எப்போதுமே முக்கியம். இதை நான் கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன்.
இந்தமுறை நான் வாரணாசி செல்வதால் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடவிருக்கிறேன். எப்போதும் கடவுளுடன் தொடர்பு கொள்வதில் கவனமாக இருப்பேன். சமீப காலமாக மற்ற சிறு செயல்களையும் செய்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்புதான் ஒரு நடிகர்/ நடிகை எவ்வளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை புரிந்துகொண்டேன்.
அதுமுதல், எனது செல்வாக்கை நேர்மறையாக பயன்படுத்த விரும்புகிறேன். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன் என்றார்.