பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மும்பை சாந்தாக்ரூஸ் என்ற இடத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலை 6 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆபாச பட வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
வெப் சீரிஸ் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும் அதை தனியாக செல்போன் செயலியை தயாரித்து அதில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா உள்பட 11 பேர் மும்பை போலீஸாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களை தவறாக சித்தரிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குந்த்ரா வீட்டில் சோதனையிட்ட போது அவருடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதம் செய்தார். அப்போது காவல் துறையினர் முன்பே அழுத ஷில்பா ஷெட்டி, தனக்கு ராஜ் குந்த்ரா செய்த தவறுகள் குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளார். மேலும் குந்த்ராவின் செயலால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் அவர் அழுதார். சமூகத்தில் நாம் நல்ல அந்தஸ்தில் இருந்தும் ஏன் இப்படியொரு காரியத்தை செய்தீர்கள் என குந்த்ராவிடம் ஷில்பா ஷெட்டி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வழக்கு விசாரணையில் குந்த்ரா மற்றும் ஷில்பா ஆகிய இருவரும் இணைந்து வங்கியில் கணக்கு வைத்திருந்ததாகவும் இந்த கணக்கு மூலமாக பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இரு வழக்கு பதிவு செய்த மும்பை போலீஸார் குந்த்ராவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் பதிவு செய்திருந்தனர். இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் குந்த்ரா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்து அவர்கள் விடுதலையானார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. குந்த்ராவுக்கு எதிராக இரண்டாவது முறையாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. கடந்த முறை அமலாக்கத் துறை சோதனையின் போது ரூ 98 கோடி மதிப்பிலான குந்த்ராவின் சொத்துக்கள் கிரிப்டோகரன்சி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சென்று பறிமுதல் உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் ஹாட்ஷாட்ஸ் எனும் செயலியில் குந்த்ரா உள்ளிட்டோர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் தான் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். மேலும் அவருடைய பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் வாதிட்டார். ஆனால் அந்த ஆபாச செயலியின் உரிமையாளர் கென்ரினுடன் குந்த்ரா தொலைபேசியில் இருந்து விவாதித்த வாட்ஸ் ஆப் மெசேஜ்களை போலீஸார் கண்டறிந்தனர். 119 ஆபச படங்களை 1.2 மில்லியன் டாலருக்கு விற்க திட்டமிடப்பட்டது அந்த செல்போன் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மும்பை, உத்தரப்பிரதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து குந்த்ராவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.