நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் காலமானார். சமந்தா தனது தந்தை காலமானதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். சமந்தா தந்தையின் மறைவு அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் வரை” (untill we meet again) என பதிவிட்டு உடைந்த ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். மேலும், ஜோசஃப் பிரபுவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பிறந்தவர் சமந்தா. இவரது தந்தை ஜோசஃப் பிரபு, தாய் நினேட் பிரபு. அண்மையில் சமந்தா தனது அப்பா குறித்து அளித்த பேட்டியில், “என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் மதிப்பீடுதலுடன் போராடியிருக்கிறேன். இந்திய பெற்றோர்கள் உங்களை பாதுகாப்பதாக நினைக்கிறார்கள். நீங்கள் புத்திசாலியானவர்கள் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள். என் தந்தை என்னிடம். ‘உண்மையில் நீ அவ்வளவு புத்திசாலி இல்லை, இதுதான் இந்தியக் கல்வியின் தரம், அதனால்தான் நீயும் முதல் ரேங்க் எடுத்திருக்கிறாய்’ என்று கூறியிருக்கிறார். மதிப்பிடுதலுடன் நான் போராடி பழகியதால், என்னுடைய முதல் படத்துக்கு பாராட்டுகள் வந்தபோதும் கூட அதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியாமல் இருந்தேன்” என்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதனிடையே, உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைக்கும் மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்ட வந்த சமந்தா, தற்போது உடலநலம் தேறி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமந்தாவின் தந்தை மறைவு அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.