ஜெயிலர் படத்துல இன்னும் பெட்டரா செஞ்சிருக்கலாம்: தமன்னா!

நடிகை தமன்னா அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் இவர் போட்ட ஆட்டம் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த நிலையில் தற்போது தமன்னா நடிப்பில் சிக்கந்தர் கா முகாதர் படம் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசியுள்ள தமன்னா அடுத்தடுத்து ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் தான் போட்ட ஆட்டம் குறித்தும் பேசியுள்ளார்.

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். தற்போது அவர் பாலிவுட்டில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். இருந்த போதிலும் தமிழ்ப்படங்களிலும் அவரை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டிலேயே ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஜெயிலர் படம் தமன்னாவிற்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், அரண்மனை 4 படத்திலும் ராஷி கண்ணாவுடன் இணைந்து கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா.

இந்நிலையில் அடுத்ததாக தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள சிக்கந்தர் கா முகாதர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதன் பிரமோஷனுக்காக பேசியுள்ள தமன்னா, ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் தன்னுடைய ஆட்டம் குறித்து பேசியுள்ளார். ரஜினிகாந்துடன் தான் நடித்த ஜெயிலர் படத்தில் தன்னுடைய ஆட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றநிலையில், காவாலா பாடலில் தன்னுடைய பெஸ்ட்டை தான் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்தப் பாடலை தான் இன்னும் சிறப்பாக கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே ஸ்ட்ரீ 2 படத்தில் ஆஜ் கி ராட் பாடலுக்கு தான் ஒரே நிமிடத்தில் ஓகே சொன்னதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார். படத்தில் தான் பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடாமல் சிறிய கேரக்டரிலும் நடிக்கவிருப்பதாக இயக்குநர் அமர் கௌசிக் தன்னிடம் கூறியதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார். இந்தப் பாடலுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் தான் எதிர்பார்க்காதது என்றும் முன்னதாக இந்தப் பாடல் வரவேற்பு பெறும் என்று மட்டுமே தான் நினைத்ததாகவும், ஆனால் இந்தப் பாடலுக்கு கிடைத்த இத்தகைய கொண்டாட்டத்திற்கு தான் எப்போதுமே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.