‘ராஜா சாப்’ படம் குறித்து அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ராஜா சாப். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக பிரபாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் படம் குறித்து படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார்.

ராஜா சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், “ஹாரர் தான் புதிய நகைச்சுவை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர் பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். இந்தப் படம் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தினை மாருதி இயக்குகின்றார். பீப்பிள் மீடியா பேக்ட்ரி தயாரிக்கின்றது. இப்படத்தில் இவர் இருவேறு தோற்றங்களில் நடிக்கின்றார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம், நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். ராஜா சாப் படம் மாளவிகா மோகனின் நேரடி தெலுங்குப் படம் ஆகும்.

இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற, ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார் மாளவிகா மோகனன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா சாப் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அதாவது, “ராஜா சாப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் சிறப்பாக வந்துகொண்டு உள்ளது. மேலும் எனக்குப் பிடித்த பிரபாஸ் இந்தப் படத்தில் உள்ளார். ராஜா சாப் எனது முதல் தெலுங்கு படம் என்பதால் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பிரபாஸ் ரசிகர்களையும் மாளவிகா மோகனன் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.