‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

மிர்ச்சி சிவா, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்​கத்​தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்​தின் அடுத்த பாகம் ‘சூது கவ்வும் 2’ என்ற பெயரில் உருவாகி​யுள்​ளது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்​துள்ளனர். திருக்​குமரன் என்டர்டெ​யின்​மென்ட் மற்றும் தங்கம் சினி​மாஸ் சார்​பில் சி.வி.கு​மார், எஸ்.தங்​க​ராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.அர்​ஜுன் இயக்கி​யுள்​ளார். இப்படம் வரும் டிச.13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் அமைச்சராக பதவியேற்ற அருமை பிரகாசத்தை இதில் இன்னொரு கும்பல் கடத்துகிறது. முதல் பாகத்தில் வந்த விஜய் சேதுபதியின் கேங் லீடர் இடத்தில் மிர்ச்சி சிவா இருக்கிறார். அதில் வந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, யோக் ஜேபி உள்ளிட்ட பலரும் இதிலும் வருகின்றனர்.

‘சூது கவ்வும்’ படத்தின் பலமே அதன் டார்க் காமெடியும் அரசியல் நையாண்டிகளும் தான். அப்படம் வெளியான சமயத்தில் அவை பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படத்திலும் அதில் பிரதானமாக கவனம் செலுத்தியிருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது.