நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திலிருந்து சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. அந்தப் பாடலில் கீர்த்தி சுரேஷ் ஓவர் கவர்ச்சி காண்பித்திருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கும் அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர்களின் திருமண பத்திரிகை ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ரகுதாத்தா திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் கீர்த்தியின் நடிப்பும்; படம் பேசிய விஷயமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் மட்டும் கலக்கிவந்த கீர்த்தி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அவர் அறிமுகம் ஆகியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிதாக கிளாமரை காண்பித்ததில்லை கீர்த்தி சுரேஷ். ஆனால் பேபி ஜான் படத்தின் ஒரு பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டத்தை போட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் சொக்கி போயிருக்கிறார்கள். மேலும் ஹிந்திக்கு சென்றதும் கீர்த்தி சுரேஷ் தாராளம் காண்பிக்கிறாரே என்றும் உச் கொட்டிவருகின்றனர். இந்த கிளாமர் காரணமாக அவருக்கு ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்தன. அதுகுறித்து கீர்த்தியும் அவரது குடும்பத்தினரும் மௌனமே காத்துவந்தார்கள். சூழல் இப்படி இருக்க அவர் தனது பால்ய கால தோழரை பல வருடங்களாக காதலித்துவருகிறார் என்று தகவல் பரவியது. அதனை கீர்த்தி சுரேஷின் தந்தையும் உறுதிப்படுத்தியிருந்தார். இருந்தாலும் கீர்த்தி வாயால் அந்தத் தகவலை கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதன்படி சில நாட்களுக்கு முன்பாக அவர் தனது காதலர் ஆண்டனி தட்டிலை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் 15 வருடங்களாக காதலித்துவருகிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ என்னது 15 வருட காதலா என்று ஆச்சரியத்தில் மூழ்கினர். அதுமட்டுமின்றி கீர்த்தியின் கரியர் பீக்கில் இருக்கும்போது திருமணம் செய்கிறாரே; திருமணத்துக்கு பிறகும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பிவருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் திருப்பதிக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் தனக்கும் ஆண்டனிக்கும் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கும் என்று உறுதிப்படுத்தினார். சூழல் இப்படி இருக்க கீர்த்தி சுரேஷ் – ஆண்டனியின் திருமண பத்திரிகை தொடர்பான ஃபோட்டோ வெளியாகியிருக்கிறது. அதில் தங்களது மகள் கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக சுரேஷும், மேனகாவும் தெரிவித்திருக்கிறார்கள்.