வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக விஜய் சாருக்கு ஓட்டு போடுவேன் எனவும், அவருக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து ஆதரவு கொடுப்பதற்கு நேரம் இருக்காது, ஆனால் நிச்சயமாக அவருக்கு தான் வாக்களிப்பேன் என கூறியுள்ளார் நடிகை ஆல்யா மானசா.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் போதே நடிகர் விஜய் அரசியலில் குதித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. கோட் படத்திற்குப் பிறகு ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அதற்குப்பின் முழுமையாக அரசியலில் ஈடுபட விஜய் முடிவு எடுத்திருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு 275 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய் தற்போது அரசியலிலும் பிசியாகி உள்ளார். இதனையடுத்து தனது கடைசி படத்தில் நடித்து வரும் நிலையில் சில நடிகர்கள் வெளிப்படையாகவே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில நடிகர்கள் நேரிடையாக அவர் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக விஜய் சாருக்கு ஓட்டு போடுவேன் என கூறியுள்ளார் நடிகை ஆல்யா மானசா. மதுரை ஐயர் பங்களா பகுதியில் பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மனாசா தனியார் பெண்கள் அழகு சாதன கடையினை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தார். அவருக்கு அங்கு ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கடையை திறந்து வைத்தார் ஆலியா.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மதுரைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை மக்களின் அன்பையும் மதுரை உணவின் சுவையையும் யாரும் மிஞ்ச முடியாது. உரிமையாக பாசம் வைத்து பழகுவது மதுரையில்தான். மற்ற ஊர்களுக்கு செல்வதை விட மதுரைக்கு வருவது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். மதுரை ஜிகர்தண்டா மிகவும் பிடிக்கும். சீரியலில் தினமும் உங்கள் அனைவரின் வீட்டிற்கு ஒன்பது மணிக்கு நான் வந்து விடுவேன். ஆனால் திரைப்படங்களில் நடித்தால் நீங்கள் தான் என்னை வந்து பார்க்க வேண்டும். எந்த சிரமமும் இல்லாமல் நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவதால் எனக்கு சீரியலில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும்.
விஜய் சாருக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். அவருக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து ஆதரவு கொடுப்பதற்கு நேரம் இருக்காது. பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை. குடும்பம், படப்பிடிப்பு என அதிலே நேரம் ஆகிவிடுகிறது. ஆனால் விஜய்க்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். நிச்சயமாக ஐ வோட் ஃபார் ஹிம். மதுரை கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.