சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!

த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார். தற்போதும் பல படங்களில் நடித்து வரும் த்ரிஷா இன்றுடன் சினிமாவிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இத்தனை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் த்ரிஷா

த்ரிஷா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகின்றார். கடந்த 22 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றார். என்னதான் திரைத்துறைக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆனபோதும் இன்றளவும் முன்னணி நடிகையாகவே இருக்கின்றார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல் அவரின் அறிமுக திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படத்தில் பார்த்தது போலவே த்ரிஷா இன்னும் இளமையாகவே இருப்பது அவரின் தனி சிறப்பு.

சவுத் குயின், என்றும் இளமை என ரசிகர்களால் அழைக்கப்படும் த்ரிஷாவின் வாழ்க்கையில் டிசம்பர் 13 ஆம் தேதி மறக்கமுடியாத நாள் என்றே சொல்லலாம். டிசம்பர் 13 தான் த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமான மௌனம் பேசியதே திரையில் வெளியானது. சூர்யா நடிப்பில் அமீரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் த்ரிஷா முன்னணி நாயகியாக வலம் வந்தார். இடையில் சில தோல்விகள் கொடுத்தாலும் மிகப்பெரிய வெற்றிப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்து வருகின்றார் த்ரிஷா.

அதுபோல தான் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த த்ரிஷா லியோ, விடாமுயற்சி, தக்லைப், குட் பேட் அக்லி என அடுத்தடுத்து பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். தற்போதும் உச்சபட்ச நாயகியாக ஜொலித்து வருகின்றார் த்ரிஷா.

இந்நிலையில் நேற்றுடன் த்ரிஷா திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை கடந்துள்ளார். இதை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைத்தொடர்ந்து பலரும் த்ரிஷாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை உறுதி படத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா வக்கீலாக நடிப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.