அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது; புறந்தள்ளவும் முடியாது: பா.ரஞ்சித்!

“அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. அவரை புறந்தள்ளவும் முடியாது. அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சக்தியை அமித் ஷா மற்றும் கட்சியினர் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் அமித்ஷா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. அவரை புறந்தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டியெழுப்ப முடியாது. இதனை அமித் ஷாவும் கட்சியினரும் புரிந்துகொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் பேசிய பின்னர் ஒரு பெரிய அலை மக்களிடையே எழுந்துள்ளது. அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சக்தியை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நம்முடைய சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யவதற்கான நேரம் இது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.