‘சார்பட்டா 2’ ஏப்ரலில் இருந்து படப்பிடிப்பு: ஆர்யா!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. சார்பட்டா 2 என்ற தலைப்பில் இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த ஸ்கிரிப்ட் லெவலில் தான் படம் இருப்பதாக பா.ரஞ்சித் கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். பின்பு ஆர்யா, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் குறித்து ஆர்யா தற்போது பேசியுள்ளார். ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், விழா முடிந்து செய்தியாளர்களை சந்திக்கையில், “ஏப்ரலில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம்” என கூறியுள்ளார். ஆர்யா தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் அடுத்ததாக வேட்டுவம் என்ற தலைப்பில் கெத்து தினேஷை வைத்து இயக்கவுள்ளார்.