கேப்டன் விஜய்காந்த் மறைந்து இன்றுடன் அதாவது டிசம்பர் 28ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு ஆகின்றது. இந்நிலையில் அவரது நினைவு நாளுக்கு அவரது ரசிகர்கள், அவரது கட்சியான தேமுதிகவின் தொண்டர்கள் என பலரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திக் கொண்டு உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று, மரியாதை செலுத்திக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேப்டன் நினைவு நாள் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழ் நாடு மக்கள் மனதிலும் தமிழ்நாடு அரசியல் களத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியவர். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டினையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, கண்ணீரில் மக்களை மூழ்கடிக்கச் செய்தது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று, கேப்டன் உடலுக்கு மரியாதை செலுத்தினார். இப்படியான நிலையில் இன்று கேப்டன் மறைந்து ஒரு ஆண்டு ஆவதால், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலரும் அவரது நினைவிடத்தில் குவிந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக ஏற்பாடு செய்துள்ள, குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தனது நினைவஞ்சலிகளைப் பகிர்ந்துள்ளார். அதாவது, ” மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!” என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் திரைத்துறையில் இருந்து பலர் அவரது நினைவு நாள் தொடர்பாக, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். கேப்டன் நினைவு நாள் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.