விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. பழ நெடுமாறன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நல்லகண்ணு குறித்த ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-
நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணு ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. தோழர் நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் சொல்லும் வசனங்களைப் போல தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு அணிவதும், தீபாவளி பொங்கலுக்கு போனஸ் வாங்குவதும், வேலை நேரம் 8 மணி நேரமாக இருப்பதும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதும் நல்லகண்ணு மாதிரி பல தோழர்கள் போராடி ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும். இது பற்றித் தெரியாத பல பேரில் நானும் ஒருவன். அதில் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருத்தன். தோழர் நல்லகண்ணு பற்றித் தெரிந்து கொள்வது எனக்குச் சந்தோஷம். சிவப்பு சிந்தனையும், வாழ்வியலும், நம் வரலாறும் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும். அவரோடு நான் பழகிய நாட்கள் மிகக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.