நயன்தாராவுக்கு ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் என்று அழைக்கப்படும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்தார். ஆனால் அவர்களுடனான நயன்தாராவின் காதல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்த நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். விக்கியும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் இருவரும் கோவில் கோவிலாக வழிபாடு செய்த போட்டோக்கள் வெளியாகி வந்தது.

விக்கியும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு அதேபோன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்ததாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் செம ஹிட்டானது. இதையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்தது. படம் ரிலீஸ் ஆன கையோடு திருப்பதி மற்றும் ஷீரடிக்கு சென்று வந்தனர் விக்கியும் நயன்தாராவும். அந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

விக்னேஷ் சிவன் தற்போது அஜித்தின் 62-வது படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராதான் ஹீரோயின் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண தேதி முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.