உயிர் வாங்கி ஷவர்மா – அரைவேக்காடு சிக்க(ல்)ன்

ஷவர்மா  மட்டுமல்ல, சிக்கன் உணவு விஷயங்களில் நாம் கவனமாக இருந்தாலே, பிரச்சனைகள் வராது என்கிறார்கள்.  அதுகுறித்த விரிவான செய்திதான் இது..!

தரமில்லாத சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிர்பலியாகும் சம்பவம் தற்போது நடந்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம் நாட்டையே மிரள வைத்து விட்டது. தேவானந்தா என்ற 16 வயது மாணவி காசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற கடையில் ஷவர்மா சாப்பிட்டு, பலியானதை இப்போது வரை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

ஷவர்மா திடீரென பாய்சன் ஆவது எப்படி? என்ன நடக்கும்? எந்த அறிகுறிகள் வந்தால் ஆபத்து!
ஷவர்மா சாப்பிட்டு பலியான, தேவானந்தா சாப்பிட்ட அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த ஷவர்மா கடைகள் எல்லாம் மொத்தமாக மூடப்பட்டுள்ளன… இந்த கொடுமை தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது.. 3 ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் சீரியஸாக உள்ளார்கள்.. இதனால், மதுரை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முக்கிய ஹோட்டல்களில் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த மரணத்திற்கு, உணவில் இருந்த ஷிகெல்லா பாக்டீரியா தான், மாணவி உயிரிப்புக்கு காரணம் என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதென்ன ஷிகெல்லா?
ஷிகெல்லா என்பது என்டோரோபாக்டர் பாக்டீரியா வகையை சேர்ந்தது… இது மனிதர்களின் குடலில் வசிக்கக்கூடியது. குடலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்… இந்த பாக்டீரியா சற்று ஆபத்தானது… எளிதில் பரவக்கூடியது மட்டுமல்ல, சிறிய அளவிலான பாக்டீரியா எண்ணிக்கை இருந்தால்கூட, உடல்நலக்குறைவு ஏற்படும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

அடுத்தடுத்த நாட்களில் இளம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு சோகம் ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் பயந்துபோய் உள்ளனர்.. மாணவ, மாணவிகள் அதற்கு மேல் கலங்கி உள்ளனர்.

மேனேஜர் (தாஜ் ஓட்டல் – ஊட்டி) “சிக்கனை வாங்கும்போதே பிரஷ்ஷாகவே வாங்கி வந்துவிடுவோம்.. பிரிட்ஜில் வைக்கிற பழக்கமே இங்கு இல்லை.. எங்களுக்கு ஷவர்மா செய்ய 20 கிலோ வாங்குவோம்.. அதுவே போதுமானதா இருக்கும்.. நைட்டுக்குள் எல்லாமே காலியாகிவிடும்.. அப்படியே மீதமானாலும் கொட்டிவிடுவோம்.. அதனால்தான் இதுவரை புகார் என்று வந்ததில்லை.

இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு… ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால், எந்த பொருள் கெட்டுப் போயிருந்தாலும் அதை கண்டுபிடிப்பது கடினம்.. வாடையும் வெளியே எளிதில் வராது.. அதனால்,வாங்கும்போதே பிரஷ்ஷாக வாங்கி, அன்றைய தினமே முடித்துவிடுவதுதான் பெஸ்ட் வழி.. அதுவும் இல்லாமல், இங்கே சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதால், உணவு துறை அதிகாரிகள் இங்குள்ள ஓட்டல்களில் அடிக்கடி சோதனைகளை செய்து கொண்டே இருப்பது இயல்பு.. அதனால் ஊட்டியில் உணவு பொருட்கள் எப்போதும் தரத்துடனேயே இருக்கும்” என்கின்றனர்.

நந்தகுமார் (உணவு பாதுகாப்பு ஆய்வாளர், ஊட்டி)
பொதுவாக மைதா நமக்கு கெடுதல் தரக்கூடியது.. ஏற்கனவே அதில் கெமிக்கல் உள்ளது.. அதிக அளவில் எடுத்து கொள்ள முடியாது.. அதிலும், ஷவர்மாவில் குபூஸ் என்ற ரொட்டி தயாரிக்கும் மைதா பயன்படுத்தும்போது, தொடர்ந்து சாப்பிட கூடாது.. சாலை ஓரங்களில் வைத்து விற்கப்படும் உணவுகளில் தூசி, மெல்லிய துகள்கள் படிந்துவிடும்.. இதுவும் நமக்கு கெடுதல்தான். ஷவர்மாவுக்கு மயோனீஸ் சேர்த்து தரப்படுகிறது.. இந்த மயோனீஸில், பச்சை முட்டை சேர்க்கப்படும்.. இந்த சமைக்காத பச்சை முட்டையில் பாக்டீரியாக்கள் உள்ளன..

சில கடைகளில் மீதமானதை எடுத்து வைத்து, ப்ரீசரில் வைத்து விடுகிறார்கள். மறுநாள் சூடு செய்து தருவதால் இப்படியெல்லாம் விபரீதங்கள் ஏற்படுகிறது.. அன்றைய தினம் விற்க முடியாத பட்சத்தில் அவைகளை கொட்டிவிட வேண்டும்.. கீழே போட மனசு கேட்காமல், எடுத்து வைத்த மறுநாள் சூடு செய்து தருகிறார்கள்.. அன்றைக்கே செய்து அன்றைக்கே விற்றுவிட வேண்டும்.. ஆனால், பலர் அப்படி செய்வதில்லை.. இவைகளை கண்டறிந்து களைந்து கொண்டிருக்கிறோம்.. சம்பந்தப்பட்ட கடைகளுக்கும் சீல் வைத்து வருகிறோம்” என்றார்.

டாக்டர் சுரேஷ் பாபு (கண் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர், ஊட்டி)
ஏன் நிகழ்கிறது, நாம் உண்ணும் உணவில் கலப்படம் இருந்தால், அது இத்தகைய மரணத்தை ஏற்படுத்தலாம்.. குறிப்பாக உணவில் விஷத்தன்மை இருந்தால், உயிரிழப்பு வரை சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக கோடைக்காலத்தில், ஹோட்டலுக்கு சென்றால், முதலில் உணவை நன்றாக வேக வைத்து தருகிறார்களா என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்.. அதிலும் குறிப்பாக, இறைச்சி வகைகளை உண்ணும்போது, அவை நன்றாக வேக வைத்திருக்கவேண்டும.. சில சமயத்தில் சரியாக வேக வைக்காத உணவினால், பலவகையான பாக்டீரியாக்கள் அந்த உணவில் இருந்து, நம் உடலுக்குள் சென்று, இரைப்பை மற்றும் சிறுகுடல், பெருகுடல் இத்தகைய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது..

உபாதைகள்
பாக்டீரியாக்கள் சால்மனுல்லா, சால்மோனெல்லா டைபிங் யூஎம் இது டைபாயிட் உண்டுபண்ணக்கூடிய பாக்டீரியா ஆகும்.. ஷிகெல்லா, விப்ரியோ பாக்டீரியாக்களும், சில வகையான வைரஸ்களும், நுண்ணுயிரிகளும் நாம் உண்ணும் உணவில் இருந்து உடலுக்குள் சென்று பல உபாதைகள் ஏற்பட்டுவிடுகிறது.. இது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் நாம் நிறைய அருந்த வேண்டும்.. ஆனால், அந்த தண்ணீர் தரமாக இல்லாமல் இருந்தாலும் பாதிப்பு வந்துவிடும்..

நரம்பு மண்டலம்
அதிலும் ஐஸ்கிரீம், அல்லது குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது அதில் உள்ள ஐஸ்கட்டிகள் இத்தகைய பாக்டீரியாக்கள் கலந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்த பாக்டீரியாக்கள் குடல் பகுதியை தாக்கி நரம்பு மண்டலத்துக்கு சென்று, மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.. எனவே, பெற்றோர்கள், குழந்தைகள், மாணவர்கள் வெளியே உணவகங்களில் உண்ண செல்லும்போது, வேக வைத்த உணவை சாப்பிட வேண்டும்” என்றார்.

நடராஜன் செஃப் – ஸ்டார் ஹோட்டல்
சிக்கனை மெக்னெட் செய்துவிட்டு, கிரில் முறையில் 60 செமீ நீள கம்பியில் சுற்றிவிட்டு, அதன்பிறகு வேக வைக்க வைண்டும்.. பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.. மிளகு, சீரகம், ஏலக்காய், லவங்கம், மஞ்சள், போன்றவைகள் கலக்க வேண்டும்.. இது எதுவுமே செயற்கை பொருட்கள்கிடையாது.. நாம் அன்றாட வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்தான்..

எங்கே பிரச்சனை வருகிறது என்றால், கம்பியில் கோத்து வைக்கும்போது அவற்றை சரியாக வேக வைக்காதபோது சிக்கல் வரும்.. அதேபோல மீதமானதை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் உபயோகப்படுத்தும்போது சிக்கல் அப்படியே மீதமானதை எடுத்தாலும், சரியான வெப்பநிலைக்கு வந்தவுடன்தான் எடுக்க வேண்டும், அதை முழுமையாக வேக வேண்டும்.. சூடு செய்ய கூடாது.. இருந்தாலும், மீதம் வைக்காமல் இருப்பதுதான் சிறந்த வழி. அதேபோல ஷவர்மாவுக்கு தயாரிக்கப்படும் மயோனிஸில், முட்டையின் வெள்ளைக்கரு சுத்தமானதாக இருக்க வேண்டும்” என்றார்.

By Hemavandhana
Thanks to Google and Oneindia Tamil News