தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வெச்சதுதான் சட்டம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வெச்சதுதான் சட்டம் என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “டான்”. இதில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூரியா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, ராம்தாஸ், பால சரவணன் மற்றும் பலர் நடித்து இருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது

உண்மையாக தற்போது தமிழ் சினிமாவின் டான் என்றால் அது சிவாதான். சிவா வைத்ததுதான் சட்டம். சினிமாவில் 2 டான் என்றால் ஒன்று சிவா, மற்றொன்று அனிருத். இவர்கள் 2 பேரும் தனித்தனியாக பாட்டு பாடினாலும் சரி, பாடல் எழுதினாலும் சரி ஹிட் ஆகிறது. ஏற்கனவே 2 பேரும் சேர்ந்து நிறைய படங்கள் வேலை செய்துள்ளனர். எல்லாமே சூப்பர். அந்த வரிசையில் இந்த படத்திலும் அவர்களின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. இப்படத்தை 10 நாட்களுக்கு முன்பே ரீரெக்கார்டிங் செய்வதற்கு முன்பே காட்டிவிட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு டாக்டர் படத்தை விட இந்த படம் ஹிட் ஆகும் என்று நம்பிக்கை இருந்தது. நிச்சயம் சிவாவுடைய வெற்றிப்பட வரிசையில் இது இருக்கும். மே 13 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்கிறோம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். லைக்கா நிறுவனம் நிறைய படங்கள் பன்னனும். அதை எங்களுக்கே கொடுக்க வேண்டும். படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.