காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி!

பிரபல காமெடி நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

இலங்கையில் மளிகை கடை வைத்திருந்த போண்டா மணி சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடிபட்டு இறந்திருக்க வேண்டியது. ஆனால், அதிலிருந்து குணமடைந்த நிலையில், சிங்கப்பூரில் ஒரு கடையில் வேலைக்குச் சென்றார். அங்கே பாக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தும் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. சேலத்தில் இலங்கை அகதியாக சொந்தங்களுடன் தஞ்சம் புகுந்த போண்டா மணிக்கு அப்போது அங்கே பவுனு பவுனுதான் ஷூட்டிங் நடப்பது தெரிந்து அங்கே செல்ல அவரை அடையாளம் கண்டு கொண்ட பாக்கியராஜ் முதன் முதலாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணிக்கு தற்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அவர் உடனடியாக நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.