ராணி எலிசபெத் மறைவை முன்னிட்டு அவருடனான தனது சந்திப்பு குறித்து கமல்ஹாசன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணி எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ திரைப்படத்தை கடந்த 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி தொடங்கினார். இந்த படத்தின் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். எலிசபெத் ராணியின் வருகையை நடிகர் கமல்ஹாசன் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-
உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலகத் தலைவர் அவர். காலனி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். மருதநாயகம் அவர்களை காலனிய ஆட்சி வருவதற்கும் முன்னாள் தூக்கில் இடப்பட்ட அதே தேதியில் இங்கு வந்தார். நாங்கள் பேசிய வசனங்கள் எல்லாம் காலனி ஆட்சிக்கு எதிரான வசனங்களை நாங்கள் இது தான் பேச போகிறோம் என்று தெரிந்தும் அவர் அங்கு வந்து அமர்ந்திருந்தார். ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக இந்தியா வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. நானும் அங்கு சென்று பக்கிங்காம் மாளிகையில் அவரை சந்தித்தேன். புதிய உலகை அனுபவித்து நீண்ட நாட்கள் வாழ்ந்து உலகத் தலைவர்களில் ஒருவர், வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பார்க்காத உலக சரித்திரம் ஒன்றுமில்லை சொல்லுமளவிற்கு அனைத்து மாற்றத்தையும் பார்த்து அனுபவித்து அதற்கான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்லி மறைந்திருக்கிறார். இங்கிலாந்து மக்களுக்கு அனுதாபங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.