காற்றுக்கு யார் சாயம் அடிப்பது?: கவிஞர் வைரமுத்து!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் பற்றி சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து ஆளுநருக்கு கேள்வி எழுப்பும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் உலகிற்கான முதல் நூல் என்ற நூலை வெளியிட்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். மனிதன் எப்படி இருக்க வேண்டும் என கூறும் நூல் திருக்குறள். ஆனால் அது ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால் திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை நூலாக மட்டும் காட்ட நினைப்பது தவறு. அரசியலுக்காக தவறாக நம் நாட்டின் ஆன்மீக சிந்தனைகளை கொண்ட நூல் திருக்குறள். ஆனால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உண்மையான அர்த்தத்தை விளக்கவில்லை. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனை தவறாக மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை. மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. ஆளுநரின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவுடமையான திருக்குறளை ஆன்மீகத்துடன் மட்டுமே ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், “தர்மார்த்த காமமோட்சம் என்பது வடமொழி நிரல்நிரை. மோட்சம் ஆன்மிகக் கற்பனை என்றுதான் வள்ளுவர் அறம் பொருள் இன்பத்தோடு நிறுத்தினார். ஆன்மிகம் அதில் ஏது? வள்ளுவம் வாழ்வியல் நூல். அது காற்றைப்போல் பொதுவானது, காற்றுக்கு யார் சாயம் அடிப்பது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.