ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரியமும், பழம்பெருமையும் வாய்ந்த ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டபோது, ஒட்டு மொத்தத் தமிழக மக்களும் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராடினர். தன்னெழுச்சியாக நடந்த இப்போராட்டங்களின் விளைவாக தடை தகர்க்கப்பட்டது. மீண்டும் ஜல்லிக்கட்டு நடந்தது. தை மாதம் பிறக்கப் போகிறது என்றாலே பொங்கல் திருநாளும், ஜல்லிக்கட்டும்தான் தமிழக மக்களின் நினைவுக்கு வரும். விரைவில் வரவிருக்கும் தை மாதப் பிறப்பை முன்னிட்டு, தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் ஆர்வலர்கள் தங்கள் காளைகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கிவிட்டனர். கொரோனாவுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் தைப்பொங்கல் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அதற்கான ஆணை கிடைக்குமென எதிர்பார்க்கும் காளை உரிமையாளர்கள் அதற்காக ஜல்லிக்கட்டு காளைகள் தயார்படுத்தும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களோடு, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் தடைகோரிய அமைப்புகளிடம், திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லை என்றாலும் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது. அதை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எவை உள்ளது? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும் தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார். நேற்று முன் தினம் வெளியான காரி திரைப்படம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், காரி திரைப்படத்தை ரசிகர்களோடு இணைந்து ராமநாதபுரம் ரமேஷ் திரையரங்கில் இயக்குனரும் காரி திரைப்படத்தின் நடிகருமான சசிகுமார் படம் பார்த்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தைப் பயன்படுத்தி உயிரோட்டமான கதை களம் நிறைந்த பகுதிகளில் காரி திரைப்படம் எடுக்கப்பட்டது. பொதுமக்கள் திரைப்படம் எடுப்பதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் இருந்து வருகிறது. மேலும், பாரம்பரியம் மறக்காமல் மாவட்ட முழுவதும் சிலம்பு தப்பாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் போன்ற கிராமிய கலைகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகிறது மிகவும் பெருமையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அது தமிழக மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.