எந்த ஒரு நடிகையுடனும் எனக்கு பெரிதாக நட்பு இருந்தது இல்லை என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை திரிஷா. கடந்த 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனை தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கடைசியாக திரிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான பரமபத விளையாட்டு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்து அசத்தியிருந்தார்.
திரிஷா தற்போது கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ‘ராங்கி’ படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. எங்கேயும் எப்போதும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சரவணன் ‘ராங்கி’ படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், கோபி கண்ணதாஸன், லிஸ்ஸி ஆண்டனி, ஜான் மகேந்திரன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் புரமோஷனில் பிசியாக இருக்கும் திரிஷா பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசியுள்ளார். ஆரம்பத்தில் ‘காத்து வாக்குல காதல்’ படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் பேட்டியில் அந்த படத்தில் நடிக்காததிற்கான காரணம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கும். அது அத்துடன் முடிந்துவிட்டது, ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதே தெளிவான ஒரு விஷயம் தானே. நயன்தாராவிற்கும் எனக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டியாக பார்த்தால் அது நல்ல விஷயம். ஆனால், ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலம். அது நானாக இருந்தாலும் சரி மற்ற ஒரு நடிகையாக இருந்தாலும் சரி. மேலும், நயன்தாரா உட்பட சினிமாவில் இருக்கும் எந்த ஒரு நடிகையுடனும் எனக்கு பெரிதாக நட்பு இருந்தது இல்லை. இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.