தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி: பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி என்று பாரதிராஜா கூறினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:-

பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை சென்று வரலாம். வாழ்க்கையில் அப்படி முடியாது. தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி என்பது உங்களுக்கே தெரியும். 30 வருடங்களுக்கு முன்பு இவனுடைய கவிதை தொகுப்பை நான் வெளியிட்டு இருக்கிறேன். அந்த புத்தகத்தைப் படித்ததும் இவனுக்குள் இப்படி ஒரு எழுத்தாளனா என்று ஆச்சரியப்பட்டேன். எழுதுவது என்பது வேறு, சினிமா எடுப்பது என்பது வேறு. ஆனால், இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறான். இப்படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்திருக்கிறேன். எனக்கு மகனாக இயக்குனர் கௌதம் மேனனும், மகளாக அதிதியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் மாதம் வெளியாகிறது. பத்திரிகையாளர்கள் அனைவரும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.