‘அயோத்தி’ மதம் சார்ந்த படம்னு தப்பா நினைக்காதீங்க: சசிக்குமார்

அயோத்தி திரைப்படம் மதம் சார்ந்த படம் என்று தவறாக நினைத்துவிடாதீங்கள் என்று நடிகர் சசிக்குமார் கூறியுள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட சசிக்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு, கொம்பு வச்ச சிங்கமடா, காரி, பகைவனுக்கு அருள்வாய், நான் மிருகமாய் மாற என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனால், எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுத, மதம், இனம், மொழிகளைக் கடந்தது மனிதம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி, இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளது. இப்படம், நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அயோத்தி படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சசிக்குமார், படத்தை பார்த்து விட்டு பலர் பாராட்டினார்கள். நாடோடிகள், சுந்தரபாண்டியன், சுப்பிரமணியபுரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து ரசித்து, ரசிகர்கள் எப்படி கை தட்டினார்களோ அப்படி இந்த படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் கை தட்டினார்கள். இதைப்பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மதம் சார்ந்த படம் இல்லை இந்த படத்தின் தலைப்பை பார்த்து, பிரச்சனைக்குரிய படம் என்று யாரும் தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். இது மதம் சார்ந்த படம் இல்லை மனிதம் சார்ந்த படம் என்றார். மேலும், இது ஹீரோவை பற்றிய படம் இல்லை, ஒரு சராசரி மனிதன் பற்றிய கதை என்பதால், இப்படத்தில் ஹீரோயிஷம் இருக்காது என்றார்.