இதயத்தில் இருக்கும் முக்கிய தமனியில் 95 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும், தான் தற்போது நலமாக இருப்பதாகவும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவில் வந்தார் சுஷ்மிதா சென். சுஷ்மிதா சென்னுக்கு தொண்டையில் வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருப்பதால் சரியாக பேச முடியவில்லை, இருப்பினும் பேசினார். இன்ஸ்டா லைவில் வந்த சுஷ்மிதா சென் கூறியதாவது:-
எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது. என் வீடு முழுக்க பூக்களாக இருக்கிறது. அனைத்து கண்டங்களில் இருந்தும் அன்பு கிடைத்திருக்கிறது. மக்கள் எனக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நலமாக இருக்கிறேன். குரல் மட்டும் தான் சரியாக இல்லை. வைரல் பிரச்சனை. அதனால் எனக்கு உடம்புக்கு சரியில்லை என நினைக்க வேண்டாம். நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறேன். இந்த வைரல் சரியாகட்டும் என காத்திருந்தால் உங்களை பார்க்க பல நாட்கள் ஆரும். அதனால் தான் தற்போதே பேசுகிறேன்.
எனக்கு சாதாரண மாரடைப்பு இல்லை. என் இதயத் தமனியில் 95 சதவீத அடைப்பு இருந்தது. அதில் இருந்து நான் பிழைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன். நான் இன்று உயிருடன் இருப்பதற்கு நானாவதி மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் தான் காரணம். நான் இன்று ஒரே பீஸாக இருக்க பலரின் உழைப்பு இருக்கிறது. மொத்த ஐசியு குழுவுடன் சேர்ந்து என் உயிரை காப்பாற்றிய நானாவதி மருத்துவமனையின் ஐசியு பிரிவு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மருத்துவமனையில் இருந்த செய்தியை அவர்கள் யாரும் வெளியே சொல்லவில்லை. நான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதை வெளியே சொல்லக் கூடாது என்று மட்டும் தான் கோரிக்கை விடுத்தேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆர்யா சீசன் 3ல் நான் நிச்சயம் நடிப்பேன். நீங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கப் போகிறீர்கள். இவ்வாறு சுஷ்மிதா சென் கூறினார்.
முன்னதாக ஹார்மோன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் சுஷ்மிதா சென். உயிருடன் இருக்க 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்ட் எடுத்து வந்தார். அந்த பிரச்சனை சரியாகிவிட்டாலும் ஸ்டெராய்ட் எடுத்து வந்ததால் பின்விளைவுகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.