இந்தியா இந்தி நாடு கிடையாது. பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா இல்லை: நடிகை ரம்யா!

நடிகை குத்து ரம்யா ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதே சமயம் நடிகை திவ்யா இந்தியா ஒன்றும் இந்தி நாடு கிடையாது என்றும் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைத்து இருந்தார். 1100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த அந்த படம் ஆஸ்கர் மேடையிலும் கம்பீரமாக கெத்துக் காட்டிய நிலையில், ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல்வேறு கன்னட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமான நடிகை ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை உருவாக்கிய அனைவரையும் வெகுவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். இந்தியா என்றாலே வெளிநாட்டினரின் கண்களுக்கு இந்தி நாடாகவே தெரியப்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தெலுங்கு பாடலான நாட்டு நாட்டு பாடலின் வெற்றி தென்னிந்தியாவை உலகறிய செய்துள்ளது என்றும், இந்தியா வெறுமனே இந்தி நாடு என்கிற மாயை உடைத்தெறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.