வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் யாஷிகாவின் தோழி ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பாவனியுடன் (28) கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வந்திருந்தார். இதையடுத்து புதுவையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டிக்காக ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32 ) வள்ளிச் செட்டி பாவனி ஆகியோருடன் காரில் யாஷிகா சென்றிருந்தார். அப்போது இரவு பார்ட்டி முடித்துவிட்டு இவர்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நள்ளிரவில் காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் வேகமாக வந்ததாக தெரிகிறது. காரை யாஷிகா ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடம் வந்ததும் கார் நிலைத்தடுமாறி சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வள்ளிச் செட்டி பாவனி அதே இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் சிலர் மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து பாவனியின் சடலத்தை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த பாதிப்பிற்காக சில மாதங்கள் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இந்த காயத்திலிருந்து எப்படியோ மீண்டு வந்த யாஷிகா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

எனினும் இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு மார்ச் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி, யாஷிகாவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது.