நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர் சுந்தர் சி இயக்கி தயாரித்த ‘ஆம்பள’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்திற்கு இசையமைத்தார். இந்தப்படத்தின் ஆல்பம் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து தனி ஒருவன், அரண்மனை 2, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். இசையமைப்பாளராக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகர் அவதாரமும் எடுத்தார். இந்தப்படத்தை அவரே இயக்கவும் செய்தார். மீசைய முறுக்கு படத்தினை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள், சிவக்குமாரின் சப்தம், அன்பறிவு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் பிஹெச்டி முடித்துள்ளேன். இது படிச்சு வாங்குன டாக்டர் பட்டம். இனிமேல் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். இந்தியாவிலே முதன்முறையாக இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. படிப்பில் அதிக கவனம் செலுத்தி ஆறு ஆண்டுகளில் இந்த டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார் ஆதி.