நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அஜித்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் மார்ச் 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் நடிகர் அஜித்குமாரின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற இறுதிச்சடங்கு நடைபெற்றது.
நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது நடிகர் அஜித்குமார், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எப்போதும் அரசியல் குறித்த சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.