ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கு என்றார்.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்ற்னர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பத்து தல பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதால் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சிம்புவை திரையில் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்து தல ரிலீஸான திரையரங்குகள் முன் குவிந்தனர். கட் அவுட்டுகள் வைத்தும், சிம்புவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடியும் உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.
சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல ரிலீஸானது. நேற்று காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பான கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “யாரும் யாரையும் ஒடுக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்கு நடந்தாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கு” என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.