மாமன்னன் படத்தில் வழக்கமாக நாம் பார்க்கும் வடிவேலு இருக்க மாட்டார் என்றும், வேறு ஒரு தளத்தில் வடிவேலுவைக் காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாதிய ஒடுக்குமுறைகளை பேசிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் மூன்றாவதாக இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படம்தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதுவே தனது கடைசி படம் என்று அறிவித்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கமிட்டான கமலின் படத்தில் இருந்தும் விலகினார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வடிவேலுவை மிகவும் கொடூர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள வடிவேலு மாமன்னன் படத்தில் ஆணவக் கொலை செய்யும் தந்தையாக நடித்துள்ளாராம். இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், வழக்கமாக நாம் பார்க்கும் வடிவேலு இந்தப் படத்தில் இருக்க மாட்டார் என்றும், வேறு ஒரு தளத்தில் வடிவேலுவைக் காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வடிவேலுவின் கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
மேலும் இந்தப் படம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தனக்கே தெரியவில்லை என்றும், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் தனக்கு வலியை தரக்கூடிய படங்கள். அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தனக்கு தெரிந்ததாகவும், ஆனால் மாமன்னன் படம் குறித்து தனக்கே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். படம் வெளியான பிறகுதான் ரசிகர்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.