மணிப்பூர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டுமென பிராத்திக்கிறேன். என் எண்ணங்கள் எப்போதும் அவர்களை நோக்கியே இருக்கிறது” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மற்ற பழங்குடியின சமூகத்தினர் மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு ஒன்று நடத்திய பேரணியின்போது கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தேறின. கலவரம் பெரிய அளவில் உருவாகி வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேற, அம்மாநில ஆளுநர் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்தார். மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் பாரம்பரிய ஹார்மனி இசை வீடியோவைப் பகிர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், “மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன். என் எண்ணங்கள் அனைத்தும் மணிப்பூர் மக்களை நோக்கியே உள்ளது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.