மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசாகி வரவேற்பை பெற்று வரும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட ரிலீசாக வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’. இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அந்தளவு எதிர்பார்ப்பு நிலவவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியான முன்றே நாளில் 100 கோடி வரை வசூலித்தது. இதனையடுத்து படம் வெளியாகி பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வரை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விரைவில் இந்தப்படத்தின் வசூல் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக நாவலில் உள்ள பலவற்றை மணிரத்னம் மாற்றியுள்ளதாகவும், ஆதித்ய கரிகாலனின் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொண்டு இறப்பதை போன்று காட்சிப்படுத்தியுள்ளதை ஏற்க முடியாது என்றும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தாண்டி ‘பொன்னியின் செல்வன் 2’ வசூலில் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.