தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த ஆதா ஷர்மாவின் போன் நம்பர் இணையத்தில் கசிந்ததை அடுத்து அவரை சிலர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், தி கேரளா ஸ்டோரி. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து பெண்கள் காணாமல் போனதாகவும், அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிட்டதை அடிப்படையாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவாக்கப்பட்டது. 30 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய அளவில் இதுவரை ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆதா ஷர்மா கூறியுள்ளதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன் என் செல்போன் எண்ணை விஷமிகள் இணையத்தில் கசியவிட்டனர். அந்த நம்பரில் சிலர் தன்னை மிகவும் ஆபாசமாக பேசுகின்றனர். சாதாரண ஒரு பெண்ணின் மொபைல் நம்பரும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தால் அவள் மனம் என்ன பாடுபடுமோ? அதே போலத்தான் நானும் உணர்கிறேன். இது மிகவும் கீழ்த்தனமான செயல், இப்படி அசிங்கமாக நடந்து கொண்ட அந்த நபரின் வக்கிரமான மனநிலையை காட்டுகிறது. தி கேரளா ஸ்டோரி படத்தில் இதே போன்ற காட்சி ஒன்று உள்ளது. அதில், ஒரு பெண்ணின் போன் நம்பர் பகிரங்கமாக வெளியாகும் போது, அந்தப்பெண் அடையும் வேதனையை இந்தச்சம்பவம் நினைவுபடுத்துகிறது. என்னுடைய எண்ணை பொதுவெளியில் வெளியிட்ட நபர் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். என்னுடைய மொபைல் நம்பரை மாற்ற வேண்டும் என்பதே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சிறையில் அடைக்க நான் கொடுத்த விலையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.