நான் பணம், புகழை சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை: ஷ்ரேயா ரெட்டி

நான் பணத்தை புகழை சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை என்று நடிகை ஷ்ரேயா ரெட்டி கூறியுள்ளார்.

விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஷ்ரேயா. அதன் பிறகு வெயில், காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்தவர் திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார். ஆனால், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழில் ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றிருக்கு ஷ்ரேயா ரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

திமிரு படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், மக்கள் ஈஸ்வரியை மறக்கவில்லை. அப்படத்தில் ஏற்ற எதிர்மறையான கதாபாத்திரத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னைப் பொறுத்துவரை அக்கதாபாத்திரம் ஒரு சவால். திருமணத்திற்குப் பின் ‘அண்டாவ காணோம்’ என்கிற அழகான தமிழ் படமொன்றில் நடித்தேன். ஆனால், இதுவரை அது வெளியாகவில்லை. தற்போது, பிராஷாந்த் நீல் இயக்கத்தில் நான் நடித்து வரும் சலார் படத்தில் என் கதாபாத்திரம் நல்லவளா, கெட்டவளா எனப் புரியாத அளவிற்குக் பிரஷாந்த் காட்சிப்படுத்தி வருகிறார். அவர் ’என்னை நம்பி நடிங்க’ என்றதால் நான் பிரஷாந்த் சொல்வதைக் கேட்டு நடித்துவருகிறேன். இப்படம் என் திரை வாழ்வில் ‘கம்பேக்’ திரைப்படமாக இருக்கும்.

நான் மிகச்சிறந்த நடிகை என்று நம்பவில்லை. ஆனால், எனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரங்கள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை கச்சிதமாக என்னால் செய்யமுடியும். உண்மையில் நான் பணத்தை புகழை சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை. நடிப்பு என் வேட்கை. நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்பதால்தான் கதைகளைக் கேட்டு பொறுமையாக படங்களில் ஒப்புக்கொள்கிறேன். வெயில், காஞ்சிவரம் படங்களில் என் கதாபாத்திரங்களில் ஒரு மென்மையும் உணர்ச்சிமிக்கவளாக இருக்கும். ஆனால், இன்னொரு பக்கம் என் தோற்றம் என்னை தைரியமானவளாகவும் காட்டுவதால் நான் சில இடங்களில் வேறு வழியில்லாமல் இருக்கிறேன். மேலும், நான் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு நடுவில் இருக்க முடியாது. காரணம் மக்கள் என்னை வலிமையான பெண் என நம்புகிறார்கள். நான் யார் என்று பார்க்க நீங்கள் என்னை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து நல்ல கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. நாட்டில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், பேச வேண்டும், அமர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன நினைக்கிறோம்? இந்த எல்லைகளை உடைக்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதைத்தான். அதைத்தான் இன்றைய கதாபாத்திரங்கள் பேசவும் செய்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.