படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து யாரும் பறித்துக்கொள்ள முடியாது என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு பேசினார். படிப்பை தவிர்த்து பார்த்தால் நம்முடைய குணமும் சிந்திக்கும் திறனும்தான் எஞ்சியிருக்கும் என்றும் நடிகர் விஜய் கூறினார்.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்தார். இந்த விழாவில் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய விஜய், வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களே என்று தனது பேச்சை தொடங்கினார் நடிகர் விஜய். அவர் பேசியதாவது:-
உன்னில் என்னைக் காண்கிறேன் என்று ஒரு பழமொழி உள்ளது. உங்க எல்லோரையும் பார்க்கும் போது எனக்கு என்னோட ஸ்கூல் டேஸ் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் படிப்பைத் தவிர வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று கூறிய விஜய், நான் பேசுவது போரடித்தால் சொல்லிவிடுங்கள் நான் பேச்சை நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னார். நான் வந்து உங்களை மாதிரி பெரிய புத்திசாலி மாணவன் எல்லாம் கிடையாதுங்க. ரொம்ப ரொம்ப ஆவரேஜ் ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட்தான். நான் நடிகன் ஆகாவிட்டால் டாக்டராக ஆகியிருப்பேன் என்று சொல்ல விரும்பவில்லை. என்னுடைய கனவு எல்லாம் சினிமா, நடிப்பு என்றுதான் இருந்தது. ஒருவேளை.. என்று சொல்லி விட்டு சிரித்த விஜய் அதை விடுங்க அது எதுக்கு இப்ப என்று சொன்ன உடன் மாணவர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறியுள்ளது. இந்த மாதிரி விழா ஏற்பாடு செய்வதற்கு முக்கிய காரணம் உள்ளது. காடு இருந்த எடுத்துக்குவாங்க..ரூபாய் இருந்த பிடிங்கிக்கொள்வார்கள். படிப்பை மட்டும் யாரும் உன்னிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என்று என்று ஒரு படத்தில் வசனம் வரும். அது ரொம்ப பாதித்தது. இது 100க்கு 100 உண்மை. எதார்த்தமும் கூட. அப்படிப்பட்ட கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுக்கான நேரம்தான் இது என்று நினைக்கிறேன். இதுக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், என்னுடைய மக்கள் இயக்க நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வேற என்ன லைப்ல ஃப்ரியாக கிடைப்பது அட்வைஸ்தான். எனக்கு பிடித்த விசயத்தை ஷேர் பண்றேன். உங்களுக்கு பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
முழுமையான கல்வி என்றால் என்ன என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நாம் பள்ளி, கல்லூரிக்கு போய் பட்டம் வாங்குவது மட்டுமே முழுமையான டிகிரி ஆகிவிடாது. நாம் பள்ளிக்கு போய் படித்து முடித்து அது மறந்த பிறகு எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் முழுமையான கல்வி என்று சொன்னார். முதலில் எனக்கு புரியவில்லை. போக போக புரிந்தது. எனக்கே புரிந்த விசயம் உங்களுக்கு புரியும் என்பதால் சொல்கிறேன் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து உங்களுடைய கேரக்டர், உங்களுடைய சிந்திக்கும் திறன்தான் எஞ்சியிருக்கும். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் அது முழுமையான கல்வியாக மாறும். கேரக்டர் பற்றி ஒரு லைன் உள்ளது. “வெல்த் ஈஸ் லாஸ்ட் நத்திங் இஸ் லாஸ்ட்..ஹெல்த் ஈஸ் லாஸ்ட் சம்திங் ஈஸ் லாஸ்ட்..கேரக்டர் ஈஸ் லாஸ்ட் எவ்ரிதிங் ஈஸ் லாஸ்ட்” என்று சொன்னார் விஜய்.
பணத்தை இழந்தால் எதையும் இழக்கமாட்டீர்கள்..ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள்..குணத்தை இழந்து விட்டால் அனைத்தையும் இழந்து விடுவீர்கள் என்று சொன்னார் விஜய். இது நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் வேற வேற ஊர்களுக்கு சென்று படிக்கப்போகிறீர்கள். எங்கு சென்றாலும் உங்களுக்கு கிடைக்கிற சுதந்திரத்தை செல்ப் டிசிப்பிளின் உடன் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை நம்முடைய கைகளில்தான் உள்ளது. இப்போது சமூக வலைத்தளங்களில் நிறைய பொய் செய்திகள் வருகிறது. கவர்ச்சிகரமான தகவல்கள் மூலம் கவனத்தை கவர்கின்றனர். எனவே எது உண்மை எது பொய் என்று உணர்ந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தை தாண்டி படியுங்கள் என்று சொன்னார். நான் இப்போதுதான் நிறைய படிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு கதை படிப்பதை விட சொல்வதே கேட்பதுதான் பிடிக்கும். தலைவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உன் நண்பனைப்பற்றி சொல் நான் உன்னைப்பற்றி சொல்வேன் என்று சொல்வார்கள். இன்றைக்கு நீ எந்த சோஷியல் மீடியா பேஜை ஃபாலோ பண்றேன்னு சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பதுதான் புதிய பழமொழி என்று சொன்னார் விஜய்.
நீங்கதான் நாளைய வாக்காளர்கள். புதிய புதிய நல்ல நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போகிறீர்கள். நமது கண்ணை வைத்து நாமே குத்துவது போல இன்றைக்கு அந்த வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். எது.. காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது. ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தால் ஒரு தொகுதிக்கு ரூ. 15 கோடி செலவு செய்கின்றனர். ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன்பாக எவ்வளவு செலவு செய்திருக்க வேண்டும் யோசித்து பாருங்கள் என்று சொன்னார் விஜய். இது எல்லாம் உங்க கல்வி திட்டத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மாணவ மாணவிகள் அவங்க பெற்றோர்களிடம் போய், இனிமேல் காசு வாங்காமல் ஓட்டு போடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். சும்மா ட்ரை பண்ணுங்க. நீங்கள் சொன்னால் அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள்தான் அடுத்தடுத்த வருடத்தில் வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப் போகிறீர்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இது நடந்தால் உங்களுடைய கல்வி முறையே முழுமை அடைந்தது போலாகும். உங்களுடைய ஊரில் தெருவில் தோல்வியடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறுங்கள். தேர்வில் வெற்றியடைவது எவ்வளவு எளிதானது என்று பேசுங்கள். நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை மாணவர்களின் வெற்றிக்கு உதவும். அப்படி யாராவது வெற்றியடைந்தால் நீங்கள் கொடுக்கும் பரிசாக நான் நினைத்துக் கொள்கிறேன் என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
விஜய் ஆர்கே கன்வென்ஷன் சென்டருக்கு ரசிகர்களின் கூட்டத்தில் திக்குமுக்காட வைத்தனர். அந்த வகையில் விஜய் விழா மேடைக்கு வந்ததும் அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போடப்பட்ட இருக்கைகளுடன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செயல்பட்டு வரும் நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் கீர்த்தி வர்மா அமர்ந்திருந்தார். அவருக்கு விஜய் கை கொடுத்தார். விஜய்க்கு கீர்த்தி வர்மா ஒரு புகைப்பட ஓவியத்தை கொடுத்தார். அப்போது விஜய் அதை பிரித்து பார்த்தார். அவருடைய புகைப்படம் வரையப்பட்டிருந்தது. இதனால் விஜய் நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் விஜயிடம் அந்த ஓவியம் குறித்து கீர்த்தி வர்மா ஏதோ கூற அதற்கு விஜய் நெகிழ்ந்து கட்டியணைத்தார். பின்னர் விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் கீர்த்தி வர்மா கண்கலங்கினார். அதை பார்த்து விஜய்யும் கண் கலங்கி சோகமாகவே இருந்தார். கீர்த்தி வர்மா மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்தார். தந்தையை இழந்தவர், தாய் கூலி வேலை செய்து வருகிறார். கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் 10ஆம் வகுப்பில் 437 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
விஜய்யின் வலது புறத்தில் மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவி ஒரு குழந்தை போல் படுத்திருந்தார். அவரிடமும் பேசினார். அவரது கைகளை சரியாக பிடித்து வைத்தார். இவர்களின் நிலைகளை கண்டு விஜய் மன வேதனையடைந்தார். பின்னர் சில மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இத்தனை நாட்கள் பட விழாக்களில் பேசி வந்த விஜய் தற்போது முதல் முறையாக இது போல் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியிருக்கிறார். இதை அவரே கூறினார். மேலும் நம்மை கெடுக்கும் கூட்டம் நம்மை சுத்தி இருக்கும். அவர்களை நம்பாமல் மனசாட்சி என்ன சொல்லுகிறதோ அதை நம்புங்கள் என்றார்.
இந்நிலையில், இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார் நடிகர் விஜய். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3ஆம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மொத்தம் ரூ.2 கோடி செலவில் இந்த விருது விழா நடைபெறுவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய். இரண்டு கைகளையும் இழந்த மாணவர் கீர்த்தி வாசனுக்கு பொன்னாடை அணிவித்து மேடையில் பரிசளித்தார்.