கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய காரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரிசாக அளித்தார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

அரசியல் விமர்சகர் ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுநர். இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் வி.வி. என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிரபலமானார். இதையடுத்து கோவை தெற்கு சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துநர், கனிமொழி எம்பியிடம் பேருந்து பயணத்திற்கு கட்டணம் கேட்டுள்ளார். கனிமொழியோ சிரித்த முகத்துடன் தனது பிஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் சாலை அருகே இறங்கிவிட்டார். பின்னர் ஷர்மிளா பேருந்திலிருந்து இறங்கிவிட்டார். அவர் மீண்டும் பேருந்தில் ஏறி என்னை சந்திக்க வந்த கனிமொழி எம்பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என அந்த பெண் பயிற்சி நடத்துநரிடம் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதமாக மாறியது. இதுகுறித்து பேருந்து உரிமையாளர் துரைகண்ணுவிடம் ஷர்மிளா முறையிட்டார். அதற்கு அவர் விளம்பரத்திற்காக இதையெல்லாம் செய்கிறாயா என கேட்டாராம். இதையடுத்து ஷர்மிளா அந்த பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். காலையில் கனிமொழி வந்த நிலையில் மாலை ஷர்மிளா பணிநீக்கம் பெரும் விவாதத்திற்குள்ளானது. இதையடுத்து ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகளையும் அவருக்கு பணியையும் வழங்க தான் ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்பி உறுதியளித்தார். அதன்பேரில் அந்த பெண்ணும் கனிமொழி சிபாரிசு செய்த இடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன், ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்துள்ளார்.